கோயம்புத்தூர்: கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் நாள்தோறும் கோவை மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் டன் கணக்கிலான குப்பைகள் கொட்டப்படுகிறது. பின்னர், அங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்படுவது வழக்கம். அவற்றில் சில குப்பைகள் உரம் தயாரிப்பதற்காக பிரிக்கப்படுகிறது. ஆகையால், இப்பணிகளுக்காக அந்த குப்பைக் கிடங்கில் ஏராளமான ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குப்பையை உரமாக பிரிக்கும் இயந்திரத்துக்குள் அங்கு வேலை செய்யும் கோண வாய்க்கால்பாளையம் பகுதியைச் சேர்ந்த சத்யா (23) என்பவர் சென்று துடைத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் இருப்பதை கவனிக்காமல், சக ஊழியர்கள் இயந்திரத்தின் சுவிட்ச்சை ஆன் செய்ததாகவும் தெரிகிறது.
இதனால் சத்யா அந்த இயந்திரத்துக்குள் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அவரது இரு கால்களும் எந்திரத்துக்குள் சிக்கி சிதைந்துள்ளது. பிறகு அவரது அலறல் சத்தம் கேட்டு இயந்திரத்தை நிறுத்திய சக ஊழியர்கள், அவரை மீட்க முயற்சித்துள்ளனர். அதன் பின்னர் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய அவரை மீட்க தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை தெற்கு தீயணைப்பு வீரர்கள், பாதிக்கப்பட்ட நபரை போராடி மீட்டனர். அதனைத் தொடர்ந்து அந்த நபர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.