கோவை மாநகரைப் பொறுத்தவரை அவிநாசி மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கியதால், வாகனப் போக்குவரத்து மேம்பாலத்தின் மேலே மட்டும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. அதேபோல சாய்பாபா கோயில் சிவானந்தா காலனியை இணைக்கும் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு அடியிலும் மழை நீர் தேங்கி, நின்றதில் கல்லூரி வாகனம் ஒன்று சிக்கியது.
பின்னர் மாணவர்கள் இறக்கிவிடப்பட்டு இயந்திரங்கள் மூலம் மழை நீர் வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதே போல லங்கா கார்னர், கோவை அரசு மருத்துவமனை, 80 அடி சாலை, லட்சுமி மில்ஸ், உக்கடம், போத்தனூர் ஆகியப் பகுதிகளிலும் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேட்டுப்பாளையம் சாலையைப் பொறுத்தவரை வடகோவை பகுதியில் இருந்து கவுண்டம்பாளையம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளை பொறுத்தவரை ஆனைகட்டி, சூலூர், கணியூர் ஆகியப் பகுதிகளிலும் மிக கனமழை பெய்தது.
கோவை மாவட்டத்தில் மழை பெய்யும்போதெல்லாம் இது போன்று பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக, சாலையில் மழைநீர் தேங்கி நிற்காத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க:மளமளவென உயர்ந்த மஞ்சளாறு அணையின் நீர் மட்டம்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை