கோவை: பறவைக் காய்ச்சல் பரவலை தடுக்க கேரளாவில் இருந்து வரக்கூடிய வாகனங்களுக்கு கிருமி நாசினி அடிக்கும் பணி நடைபெற்று வருவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட திப்பம்பட்டி ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கினார். அதைத் தொடர்ந்து சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் கொட்டாம்பட்டி, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கேரளாவில் பரவிக் கொண்டிருக்கும் பறவைக் காய்ச்சல் தமிழகத்திற்கு வராமல் தடுப்பதற்காக தமிழக எல்லையில் உள்ள 26 சோதனைச் சாவடிகளில் கால்நடைத்துறை மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கேரளாவில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் கிருமி நாசினி தெளித்த பின்பே அனுமதிக்கப்படுகின்றன என்றார்.