கோயம்புத்தூரில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'கோவையில், சிறப்பான முறையில் கரோனா தடுப்புப் பணி நடைபெறுவதால் வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 10 பரிசோதனை மையங்களில் நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது.
கோவையில், வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் அவினாசி - அத்திக்கடவு திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுவிடும். பி.ஏ.பி திட்டத்தில் உள்ள ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தினை செயல்படுத்த கேரள அரசுடன் பேசியுள்ளோம். அந்தத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு 4 ஆயிரத்து 125 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.
பிணை இல்லாமல் 125 கோடி கோடி ரூபாய் கடனுதவி இதுவரை வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மட்டும்தான் முதலமைச்சருக்குத் தெரிகின்றது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சிக்கிறார். இன்று(ஜூன் 25) கோவை மாவட்டத்திற்கு ஆய்வுக்கு வந்திருக்கின்றேன். தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
சேலம் போனால் அங்கு மட்டும் போகிறேன் என ஸ்டாலின் சொல்கிறார், கோவை வந்தால், எதற்கு கோவை செல்கின்றார் என்று பேசுகின்றார்.
தமிழ்நாடு அரசு கரோனா விவகாரத்தில் எதுவுமே செய்யவில்லை என தவறான, பொய்யான அறிக்கையினை திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்து வருகின்றார். இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் செய்யும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான். நோய் தடுப்பிற்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனையை இதுவரை ஸ்டாலின் கொடுக்கவில்லை.
அமைச்சர்கள் மீது அவதூறு பரப்புவதை ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அரசின் வழிகாட்டுதலைக்கூட திமுகவினர் முறையாகப் பின்பற்றவில்லை. அவ்வாறு பின்பற்றியிருந்தால் ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை இழந்திருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் இறப்பு விழுக்காடு குறைந்து, குணமடைந்தவர்களின் விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஊரடங்கு அமலுக்கு வந்து 90 நாள்கள் ஆகிவிட்டன. இந்த 90 நாள்களும் கடுமையாக உழைத்ததால்தான் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடிந்தது.
ஆர்.பி.ஐ வங்கி கூட்டுறவு வங்கிகளை கையகப்படுத்துவது குறித்து முழுமையான தகவல் இதுவரை தங்களுக்கு வரவில்லை. அர்பன் பகுதிகளை மட்டும் ஆர்பிஐ கையகப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இன்னும் தெளிவான அறிக்கை வரவில்லை.
சாத்தான்குளம் விவகாரம் போல, இனி எந்தச் சம்பவமும் நடைபெறக் கூடாது என்பதற்காக காவல் துறையினருக்கு அதன் தலைமை இயக்குநர் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
கரோனா சோதனை நேரத்தில் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என கடுமையாக காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்றம் வழங்கும் உத்தரவினை இந்த அரசு அமல்படுத்தும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒற்றைத் தலைவலி நீங்குவதற்கு வீட்டு மருந்தே போதும்!