தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று கோவையில் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கோவை ராஜவீதி பகுதியில் பொதுமக்களை முதலமைச்சர் சந்தித்து பேசினார்.
கூட்டத்தில் பேசிய அவர், "கோவை மாவட்டம் குலுங்கும் அளவிற்கு பொதுமக்கள் குவிந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திமுக கூட்டத்திற்கு வருவோர் கிண்டலாக சிரிப்பது திமுக தலைவருக்கே தெரியவில்லை. மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கூறுவது தான் ஒரு தலைவருக்கு அழகு. ஆனால் அந்த நாகரிகம் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தற்போதைய அதிமுக அரசு செய்து உள்ளது. எங்கள் ஆட்சியில் செய்ததை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்கின்றோம். இன்னும் பணிகளை செய்ய வாய்ப்பை வழங்க வேண்டும். திமுக தலைவர் குடும்பத்திற்காக வாழ்ந்தவர். ஆனால் அதிமுக தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தவர்கள்.
தெற்கு தொகுதியில் 250 கோடி மதிப்பீட்டில் மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. இக்கட்டான காலத்தில் கூட பல்வேறு புதிய தொழிற்சாலைகள் துவங்க முயற்சி எடுத்தது தமிழ்நாடு அரசு. 2011இல் தொழில் வளம் உள்ள கோவை மாவட்டம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டது. அதை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீட்டெடுத்தார். தற்போது தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக உள்ளது. மேலும், தொழில் துவங்க சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. திமுக ஆட்சியில் இருந்தது போல கட்டப்பஞ்சாயத்து நில அபகரிப்பு எதுவும் இல்லாமல் அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தொழிலதிபர்களை மிரட்டி பணம் வசூலிக்கப்படும் நிலைமை வரும்" என்றார்.