பொள்ளாச்சி நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மட்கும், மட்காத குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் ஆகியவற்றை சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நகராட்சி மூலம் நுண் உரமாக்கல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் மட்கும் குப்பைகள் நவீன இயந்திரங்கள் மூலம் அரைக்கப்பட்டு அங்குள்ள 14 தொட்டிகளில் கொட்டப்படுகின்றன. எளிதில் மட்குவதற்காக ரசாயனக் கலவை கலக்கப்படுகிறது.
ஆனால் 120 நாட்கள் வரை ஆகியும் சில நேரங்களில் குப்பைகள் எளிதில் மட்குவதில்லை. இதனால் குப்பைகள் தேக்கம் அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது. அதனால் நமத முன்னோர்கள் கண்டுபிடித்த சானத்தை வரட்டி யாக தட்டி உரமாக்கும் முறையில் - தூளாக்கப்பட்ட மட்கும் குப்பைகளை வரட்டியாகவும், செங்கல் வடிவிலும் தயாரித்து காயவைக்கப்படுகின்றன.
வரட்டியாக தட்டி காய வைப்பதால் மூன்று நாட்களிலேயே உரமாக கிடைப்பதாக நகராட்சி நிர்வாக ஆணையர் கண்ணன் தெரிவிக்கிறார். வீடுகளில் உள்ள குப்பைகளை பொதுமக்களே தரம்பிரித்து மட்கும் குப்பை மட்கா குப்பையாக வழங்குவதால் தங்களால் மிக எளிதாக உரம் தயாரிக்க முடிவதாக துப்புறவு தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த முயற்சி தமிழகத்திலேயே பொள்ளாச்சியில் மட்டும்தான் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.