பொள்ளாச்சி நகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணை சபாநாயகர் ஜெயராமன் தனது சொந்த செலவில் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கிவருகிறார். இதன்தொடர்ச்சியாக, பொள்ளாச்சியில் உள்ள கண்ணப்ப நகர், காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
இதில், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்பின் செய்தியளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு-கேரள மக்கள் சகோதரத்துவத்துடன் உள்ளார்கள். தமிழ்நாட்டிற்கு வேண்டியதைக் கேட்டவுடன் அம்மாநில அரசு நிறைவேற்றித் தருகிறது.
அதேபோல் கேரளாவிற்கு வேண்டியதை நம் தமிழ்நாடு அரசும் நிறைவேற்றிவருகிறது. விரைவில் ஆனைமலையாறு நல்லாறு திட்டம் இரு மாநில முதலமைச்சர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்படும். மேலும், பரம்பிக்குளம் பாசனத் திட்டமும் புதுப்பிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மேற்கு வங்க அமைச்சருக்கு கரோனா உறுதி!