கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டணம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவருக்குத் திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்துவருகிறார். பிரபு கடந்த சனிக்கிழமை குடும்பத்துடன் உறவினர்கள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 03) அதிகாலை அப்பகுதிக்கு வந்த முகமூடி கொள்ளையர்கள், முதலில் கண்ணன் என்பவரது வீட்டை உடைத்துள்ளனர். கண்ணனின் குடும்பத்தினர் வீட்டின் உள்ளே இருந்து சத்தம் போட்டதையடுத்து, அங்கிருந்து ஓடிய கொள்ளையர்கள் 500 மீட்டர் தொலைவில் உள்ள கார்த்திக் என்பவர் வீட்டையும் கடப்பாறையால் உடைத்து திறக்க முயன்றுள்ளனர்.
அப்போது, அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டதையடுத்து கொள்ளை முயற்சியை கைவிட்டு, கொள்ளையர்கள் தப்பியோடினர். அதனைத்தொடர்ந்து சற்று தொலைவில் உள்ள பிரபு வீட்டை கடப்பாறையால் உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் யாரும் இல்லாததால் பீரோவை உடைத்து அதிலிருந்து 13 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் சூலூர் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்த போது, முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள் அப்பகுதியில் ஆயுதங்களுடன் நடந்துசென்றது பதிவாகியுள்ளது.
இதேபோன்று கடந்த வாரம் இருகூர் மற்றும் பீளமேடு பகுதியில் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், அவர்கள்தான் இந்த கொள்ளைச் சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:செல்போன்களை திருடி OLX-இல் விற்ற 3 பேர் கைது