கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் 26 யானைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கும்கி யானைகள் கலீம், பரணி, கபில்தேவ், சின்னத்தம்பி, மாரியப்பன், வெங்கடேஷ் ஆகியவை உள்ளன. இதில் கும்கி, கலீம் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகளை பிடிப்பதில் முதல் தரவரிசையில் உள்ளது.
ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுயானைகளை பிடிக்க தமிழ்நாடு மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பிற மாநிலங்களுக்கு கலீம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தர்மபுரி மாவட்டம், ஈச்சம்பள்ளி பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்திய ஒற்றை மக்னா காட்டு யானையைப் பிடிக்க கும்கி சின்னத்தம்பி அழைத்துச் செல்லப்பட்டது.
மூன்று நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு மயக்க ஊசி செலுத்தி மக்னா யானையை பிடித்து வாகனம் மூலம், ஆனைமலை புலிகள் காப்பகம் வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், உலாந்தி வனச்சரகம் வரகளியாறு, யானை குந்தி அடர் வனப்பகுதியில் மக்னா யானை விடப்பட்டது.
பொதுமக்களிடம் நண்பனாகப் பழகிய சின்னத்தம்பி யானை பிடிக்கப்பட்டு வனத்துறையினரால் கும்கி ஆக மாற்றப்பட்டது. மக்னா காட்டு யானையைப் பிடிப்பதில் பெரும் பங்கு வகித்த சின்னத்தம்பி யானையின் முதல் வெற்றி வாகை இதுவாகும். இதனால் வனத்துறை உயர் அதிகாரிகள், வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள், மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: காட்டெருமைகள் அட்டூழியத்தால் விவசாயிக்கு கால் முறிவு - உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை