கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக களதுணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில் டிச. 06, 07 ஆகிய இரு நாள்கள் கேரள, தமிழ்நாடு வனத்துறை அலுவலர்கள் இரு மாநில எல்லைகளில் கூட்டு ரோந்து பணிகளை மேற்கொண்டனர்.
இந்த இரு மாநில கூட்டு ரோந்து பணியில் தமிழ்நாடு சார்பாக ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரக அலுவலர் நவீன் குமார், மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் ஆகிய இருவரும் வழிநடத்தினர்.
கேரள மாநிலம் சார்பாக பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கருமலை வனச்சரக அலுவலர் கண்ணன், பாபு தலைமையில் கேரள வனத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டு ரோந்து பணிகளின்போது பரம்பிக்குளம் புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம் இடைப்பட்ட பரம்பிக்குளம் நீர்பிடிப்பு பகுதிகள், மந்திரி மட்டம், சீட்டுக்கள் மலை, தவிட்டு கோழி மலை, மீன் பாறை , பத்தடி பாலம், கோழிகமுத்தி, வரகளியாறு ஏலக்காய் பாறை போன்ற பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டனர்.
மேலும் இரு மாநில வனத்துறை அலுவலர்களும் புலிகள் உட்பட வன விலங்குகளின் பாதுகாப்பு, வனப்பாதுகாப்பு, வன தீ மேலாண்மை, அந்நிய நபர்களின் நடமாட்டத்தை கண்காணித்தல், வனப்பகுதியில் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளான வேட்டையாடுதல், நில ஆக்கிரமிப்பு, மரம் வெட்டுதல் போன்றவற்றை தடுத்தல் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.