கோவை மாவட்டம் சூலுார் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தனியார் கல்லுாரியில் காவல்துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, டிஐஜி கார்த்திகேயன், கோவை மாநகர் காவல் ஆணையர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் பிரிவு டிஜிபி அசுதோஷ் சுக்லா பேசுகையில், 'சூலுார் தொகுதியில் 35 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகின்றது. அமைதியான முறையில் தேர்தலை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பணம் கொடுப்பது தொடர்பான புகார் வந்தால் 1950 என்ற எண்ணுக்கு தகவல் சொல்லலாம். இத்தொகுதியில் 66 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது' என்றார்.
இதையடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு அலுவலர்களை மாற்ற வேண்டும் என்று அறிக்கை கொடுத்துள்ளது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, பதில் அளிக்க மறுத்த அவர் சில இரகசியமான தகவல்களை வெளியிட முடியாது எனவும், அதை இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், சூலுார் தொகுதியில் இதுவரை நான்கு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் உள்பட விதிமுறைகளை மீறியது தொடர்பாக இதுவரை 4,623 வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாகவும், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 4,123 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.