கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றுவருகின்றன. காவல் துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியும் அங்கு குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதற்கிடையில் புதிதாக அண்மையில் பொறுப்பேற்ற கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின் பேரில் தற்போது அன்னூர் நகர பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி கோவை - மேட்டுப்பாளையம் சாலை உள்பட நகரின் பல பகுதிகளில் 30 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அன்னூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை காவல் கண்காணிப்பாளர் அருளரசு இன்று(அக்.04) திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை குறைக்க காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக தற்போது இந்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஹெச்டி முறையில் மிகத்துல்லியமாக பார்க்கும் வகையில் இந்த கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதால் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை துல்லியமாக அடையாளம் காணமுடியும். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கோவையில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. தற்போது கரோனா ஊரடங்கால் வறுமையின் காரணமாக குற்றச் சம்பவங்கள் சிறிதளவு அதிகரித்துள்ளது. எனினும் அனைத்து குற்ற சம்பவங்களையும் கட்டுப்படுத்த காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.