கோயமுத்தூர் ஈ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் புதுபிக்கப்பட்ட நிர்வாக அலுவலகம். 135 படுக்கை வசதியுடன் கூடிய கூடுதல் வைரஸ் தொற்று சிகிச்சை பிரிவு ஆகியவற்றை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரசவத்தின் பொழுது பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவாக உள்ளது” என்றார்.
தொடர்ந்து கூறிய அவர், இம்மருத்துவமனையில் சிதைவடைந்த நிர்வாக அலுவலகம் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் பயனடையும் வகையில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பிற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் செயல்பட்டுவந்த ஆர்டி பிசிஆர் பரிசோதனை மையத்தில் தினமும் 500 மாதிரிகளை பரிசோதித்து வந்த நிலையில், தற்போது 27 லட்சம் மதிப்பிலான தானியங்கி RNA பிரித்தெடுக்கும் இயந்திரம் நிறுவப்பட்டு, இப்பொழுது ஒரு நாளைக்கு 1500 மாதிரி பரிசோதனைகள் செய்ய ஏதுவாக வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு கிலோ லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் கொள்ளளவு பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், தற்பொழுது 52 லட்சம் மதிப்பில் 11 கிலோ லிட்டர் சிலிண்டர் நிறுவப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் தற்போது வரை 8,500 பேர் வைரஸ் தொற்றால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7550 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:இறந்து பிறந்த குழந்தை: மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியம்தான் காரணமா?