கோவை: கோவையின் துடியலூர் அருகே உள்ள அதிர்ஷ்ட லட்சுமி நகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சீனிவாசன். இவர் தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் (அக்.22) இரவு, குடும்பத்துடன் தனது வீட்டின் முதல் மாடியில் உள்ள படுக்கையறையில் தூங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று (அக்.23) அதிகாலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பீரோக்கள் திறக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடப்பதைக் கண்டு சீனிவாசன் அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1.30 கோடி மதிப்பிலான வைர, 50 பவுன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
கதவை உடைத்து புகுந்த கொள்ளையர்கள்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் காவல்துறையினர், பீரோவில் பதிவான கைரேகைகளை ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினர். காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு 3 அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே புகுந்தது தெரியவந்தது.
கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைவது தொடர்பான காட்சிகள், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இதனிடையே அதே பகுதியில் மேலும் ஆறு வீடுகளில் அடுத்தடுத்து தொடர் கொள்ளை முயற்சி நடைபெற்றிருப்பதும் காவல்துறையினரால் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து மேற்கு மண்டல காவல்துறைத் துணைத் தலைவர் முத்துச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவான கைரேகைகளைக் கொண்டு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது பழைய குற்றவாளிகளா? எனும் கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையில் தொடர் கொலை - பேருந்துகளில் சாதி, மத ரீதியான பாடல்களுக்கு தடை