கோவை: தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கத்தின் வருடாந்திரப் பொதுக்குழுக் கூட்டம் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சிவபிரகாசம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் நசீர் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "கடந்த வாரம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் வன விலங்கு கணக்கெடுப்பு சென்ற வனக்காப்பாளர், சமூக ஆர்வலர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. ஊழியர்கள் வனத்திற்குள் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும்.
ஆபத்தான பணியை மேற்கொள்ளும் வனத்துறை ஊழியர்கள், வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிர் இழப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு அரசு 50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும். பல ஆண்டுகளாக குறைந்த ஊதியம் பெற்று வரும் வனக்காப்பாளர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
தற்போது வனத்துறையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியில் அமர்த்தப்பட்டு வரும்நிலையில், அவர்களுக்கான அலுவலகம், குடியிருப்பு வசதிகள் அமைத்து தரவேண்டும்.
கோவை வனக் கோட்டத்தில் மனிதர்கள்- விலங்குகளுக்கு இடையேயான மோதலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், மாவட்ட வன அலுவலர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" எனத் தெரிவித்தார்.
கூட்டத்தில் கோவை நீலகிரி ஈரோடு மாவட்டங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: யானை தாக்கி இருவர் உயிரிழப்பு: வன அலுவலரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!