கோயம்புத்தூர்: வடகோவை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வேல்முருகன் என்பவரின் மனைவி லீலாவதி. இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை லீலாவதி தனது வீட்டிலிருந்து பூ மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது கென்னடி திரையரங்கு அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனம், மற்றொரு கார் மீது மோதி, பின்னர் லீலாவதி மீது மோதி உள்ளது. இதில் லீலாவதி சுமார் 50 மீட்டர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த லீலாவதி, தற்போது காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், இந்த விபத்தை ஏற்படுத்திய வடமாநிலத்தைச் சேர்ந்த உத்தம்குமார் என்பதும், அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டது என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வெரைட்டி ஹால் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் லீலாவதிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்தை ஏற்படுத்திய உத்தம்குமார், சிகிச்சைக்கு உதவி செய்வதாக கூறி தனியார் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, தற்பொது வரை எந்தவித உதவியும் செய்யாமல் ஏமாற்றி விட்டதாக லீலாவதியின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய உத்தம்குமாரின் வாகன ஓட்டுநர் உரிமம் காலாவதி ஆகி இரண்டு வருடம் கடந்து விட்டதாகத் தெரிவிக்கும் லீலாவதியின் உறவினர்கள், போலீசார் முறையான விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
இதுகுறித்து படுகாயம் அடைந்த லீலாவதியின் கணவர் வேல்முருகன் கூறுகையில், தனது மனைவிக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தன் மனைவி ஓராண்டுக்கு எந்த பணியும் செய்ய முடியாது என்றும், உத்தம்குமார் தரப்பினர் கூறியபடி தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லீலாவதியின் உறவினர் காயத்திரி, அதிவேகமாக வந்த கார் மோதியதில் விபத்தில் சிக்கிய லீலாவதியை 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும், பின்னர் விபத்து ஏற்படுத்தியவர்கள் தரப்பில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்குமாறும், சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தும் அவர்களே தருவதாக கூறியதாகவும் தெரிவித்தார்.
ஆனால் தற்போது வரை யாரும் சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்த முன்வரவில்லை என்றும், விபத்தில் லீலாவதியின் கால் எழும்பு உடைந்து உள்ளதாகவும், அதில் இருந்து மீண்டு வர ஓராண்டுக்கு மேல் ஆகும் என மருத்துவர்கள் கூறியதாகவும் கூறினார். மேலும் அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் உத்தம்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.