பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசு (27), சபரி (எ) ரிஷ்வந்த் (25), சதீஸ் (28), வசந்தகுமார் (24) ஆகியோரை காவல்துறை கைது செய்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
பொள்ளாச்சியில் உள்ள திருநாவுக்கரசு, சபரி, வசந்தகுமார், சதீஸ் உட்பட பலரது வீடுகளில் சிபிசிஐடி அலுவலர்கள் சோதனை நடத்தினர். நால்வரின் குடும்பத்தினரிடமும், வழக்கை விசாரித்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல் துறையினரிடமும் அவர்கள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது. கடந்த சில நாட்களாக சிபிஐ அலுவலர்கள் பொள்ளாச்சியில் இவ்வழக்கில் தொடர்புடைய பல்வேறு இடங்களில் ரகசியமாக விசாரணை நடத்திவந்தனர்.
இதனிடையே, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளி நோயாளிகள், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்களின் பெயர் பட்டியலை நேற்று மதியம் வந்த சிபிஐ அலுவலர்கள் பெற்றுச் சென்றுள்ளனர்.
இது தவிர பொள்ளாச்சி துணை ஆட்சியர் அலுவலகம், பொள்ளாச்சி வட்டட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் சென்றனர். பின்னர், மாலையில் மாக்கினாம் பட்டியிலுள்ள சபரி வீட்டுக்குச் சென்ற சிபிஐ அலுவலர்கள், அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். மாக்கினாம்பட்டி, ஜோதி நகர் பகுதிகளில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசரித்தனர்.