சென்னை: அரும்பாக்கம் 100 அடி சாலையில் அமைந்து உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் சந்தேகப்படும்படியாக நான்கு நபர்கள் பதுங்கி இருப்பதாக அரும்பாக்கம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அரும்பாக்கம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சந்தேகப்படும்படியாக இருந்த நபர்களின் உடைமைகளை சோதனை செய்து உள்ளனர்.
அப்போது சுமார் ஒன்றரை அடி உயரம் உள்ள, ஆறு கிலோ எடை கொண்ட நடராஜர் சிலை இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதனை அடுத்து நடராஜர் சிலையை பறிமுதல் செய்து அந்த நான்கு நபர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.
விசாரணையில் பிடிபட்ட நான்கு நபர்கள் ஆவடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, கொடுங்கையூரைச் சேர்ந்த ஓட்டுநர் ராமமூர்த்தி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வேங்கட கிருஷ்ணன், மாதவரத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இதில் வேங்கட கிருஷ்ணன் என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக ஆவடியில் உள்ள பழைய பொருட்கள் விற்கும் கடையில் இந்த நடராஜர் சிலையை வாங்கி உள்ளார். அதன் பின்னர், இந்த சிலையை விற்க ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் என்பவரின் அறிமுகம் கிடைத்ததாகவும் விசாரணையில் தெரிவித்து உள்ளனர்.
பின்னர் திருநெல்வேலி, அருப்புக்கோட்டை மற்றும் தென்காசி ஆகிய இடங்களுக்குச் சென்று நடராஜர் சிலையை விற்க முயன்றதாகவும், ஆனால் குறைந்த விலையில் கேட்டதால் விற்காமல் திரும்பி வந்து விட்டதாகவும் விசாரணையின்போது தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: CCTV: செல்போனை ஓரங்கட்டிவிட்டு, பணத்தை மட்டும் திருடிய பலே திருடன்!
இதனை அடுத்து அரும்பாக்கத்தில் உள்ள தங்கும் விடுதியில் தரகர்கள் மூலமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, திருச்சியில் ஒரு நபரிடம் சிலையை விற்க முடிவு செய்ததாகவும், அப்போது போலீசார் தங்களை நெருங்கி விட்டதாகவும் அவர்கள் வாக்கு மூலத்தில் தெரிவித்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து, சட்ட விரோதமாக பழமை வாய்ந்த சிலையை விற்க முயன்ற நான்கு பேரையும் அரும்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்களிடம் எவ்வளவு ரூபாய்க்கு, யாரிடம் திருச்சியில் சிலையை விற்க திட்டமிட்டனர் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட நடராஜர் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் எந்த கோயிலில் இருந்து இந்த சிலை திருடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் அரும்பாக்கம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.28 ஆயிரத்தை உடனே கட்ட வேண்டும்... - நிதி நிறுவன ஊழியர்களின் நெருக்கடியால் ஒருவர் தற்கொலை!