சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 129ஆவது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அவரது உருவச்சிலை மற்றும் புகைப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், கோவையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்னதாக, இவர் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக கோலமிட்டு வரவேற்பு தெரிவித்தார். இவ்வாறு வரவேற்பு தெரிவித்த போது, அவரின் புகைப்படம் ஒன்று வெளியாகியிருந்தது. அந்த புகைப்படத்தில் வீட்டின் முன்புறம் காலணி வைப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த ராக் இடம்பெற்றிருந்தது. நேற்று இவர் அந்த ராக் மீது அம்பேத்கரின் புகைப்படத்தை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு கோவையில் உள்ள பல்வேறு அமைப்பினரும் அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக செயற்பாட்டாளர் பியுஸ் மனுஸ் தனது முகநூல் பக்கத்தில் அந்த புகைப்படங்களை பதிவிட்டு, கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் காலணி வைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட இடத்தில் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: அம்பேத்கர் படம் அவமதிப்பு: காவல் நிலையத்தில் விசிக புகார்