பொள்ளாச்சி தனியார் கல்யாண மண்டபத்தில் கோவை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், "சட்டப்பேரவை தேர்தலில் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிப்போம் என திமுக அறிவித்ததை, உடனடியாக தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதனை உடனே நிறைவேற்ற வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். தடுப்பூசிகள் போடும் பகுதிகளில் திமுக உறுப்பினர்கள், தலைவர்களால் தடுப்பூசி செலுத்தும் பணிக்கு இடையூறு ஏற்படுகிறது.
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையைக் கொச்சைப்படுத்தி சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் பேசிய பேச்சுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்கச் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
ஓடிசா மற்ற மாநிலங்களில் ஆளும் அரசுகள் மாநில அரசு அளிக்கும் வரியை பெட்ரோல் , டீசல் விலையை பொதுமக்கள் நலன் கருதிக் குறைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.