கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலுகா பணப்பட்டி கிராமத்தில் அருந்ததியர் பெண்கள் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, மதுபோதையில் இருந்த நான்கு இளைஞர்கள் பெண்களை செல்ஃபோனில் காணொலி எடுத்து மிரட்டியது தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளிக்கவிடாமல் ஊராட்சித் தலைவர் கட்ட பஞ்சாயத்து நடத்தியுள்ளார்.
இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தன்னார்வலர் பெரியார் மணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், "பணப்பட்டி கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட அருந்ததியர் மக்களுக்கு தனி நபர் கழிவறை, பொது கழிவறை ஆகியவை இல்லாத காரணத்தால், அங்குள்ள குட்டை பகுதியில் இயற்கை உபாதையை கழிக்க செல்லும் நிலை இருக்கிறது.
இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் இயற்கை உபாதையை கழிக்க குட்டை பகுதிக்கு சென்றபோது, அதே ஊரை சேர்ந்த சதீஷ், சசி, கோபால்சாமி, பிரபு ஆகிய நான்கு பேரும் புதரினுள் மறைந்திருந்து பெண்களை செல்ஃபோனில் காணொலியாக பதிவு செய்து மிரட்டியுள்ளனர்.
இது குறித்து அப்பெண்கள், பொதுமக்கள் நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரின் கணவர் வெங்கடேஷ், அவர்களை தடுத்து கட்ட பஞ்சாயத்து நடத்தி மனு கொடுக்க கூடாது என்று மக்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளார்" என குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து தன்னார்வலர் பெரியார் மணி கூறுகையில், "இச்சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பகிர்ந்தும், இன்றுவரை சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறைகள், அப்பகுதியில் கட்டித்தரப்பட தரவில்லை.
அந்த நான்கு பேர், ஊராட்சித் தலைவர், அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சி ஜெயராமின் ஆதரவாளராக வெங்கடேஷ் இருப்பதால், அவர் இது போன்ற கட்ட பஞ்சாயத்து நடத்திவருகிறார்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: கணவரின் உறவினர்களால் கொலை மிரட்டல்: பாதுகாப்பு கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!