கரோனா பெருந்தொற்று எதிரொலியால் தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதையடுத்து அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வால்பாறை அருள்மிகு சுப்பிரமணிய திருக்கோயிலிலும் பொதுமக்களின் வருகைக்கு தடை விதித்து நித்திய பூஜை மட்டும் கோயில் அர்ச்சகர்களால் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் ஊரடங்கு உத்தரவை மீறி 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு மறைமுகமாக சிறப்பு பூஜை, யாகம் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், வால்பாறையில் அறங்காவலர் செயலர் இல்லாததால் அதனைப் பயன்படுத்தி கோயிலில் மறைமுக திருமணமும் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் களநிலவரம் குறித்து கோயில் அர்ச்சகரிடம் கேட்டபோது, அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார். மேலும் அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கினால் பொதுமக்கள், பக்தர்கள் வருகையின்றி திருக்கோயில் வெறிச்சோடி உள்ளதாகவும், கோயிலில் நித்தியப்படி செய்ய வேண்டிய பூஜைகள் மட்டும் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.