கோவையைச் சேர்ந்த முருகானந்தம், கிராமப்புற ஏழைப் பெண்களுக்காக மலிவு விலை நாப்கின்களைத் தயாரிக்கக்கூடிய இயந்திரத்தை உருவாக்கினார். இவரது சமூகப் பணியைப் பாராட்டி மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உட்பட உலகளவில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் இவர் லண்டனின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு யூனியனுக்குச் சென்று சொற்பொழிவு ஆற்றினார்.
இது குறித்து அவர் அனுப்பிய செய்திக்குறிப்பில், “சந்தைகளை ஒரு பாக்கெட்டிலிருந்து மற்ற பாக்கெட்டுக்கு மாற்றாமல் புதிய சந்தைகளை உருவாக்கும் 'இடையூறு விளைவிக்காத கண்டுபிடிப்பு' குறித்து அங்கு பேசினேன். நிறுவனங்கள், வேலைகள் மற்றும் சந்தைக்கு இடையூறு விளைவிக்காமல் தாக்கத்தை உருவாக்கிய எனது கண்டுபிடிப்பு வணிக மாதிரி என்று அழைக்கப்படுகிறது.
மேலும் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க ஆண்களைவிட பெண்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றி நான் பேசினேன். எனது இந்தச் சொற்பொழிவு ஆக்ஸ்போர்டு மாணவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. எதிர்காலத்தில் மாணவர்கள் தங்கள் கனவுகளைப் பின்பற்ற இது ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.