உலக மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெறுக்கும் ஓர் வார்த்தையாக மாறி நிற்கிறது, கரோனா. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தக் கொடிய வைரசால் உயிரைப் பறிகொடுத்துள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை கரோனாவின் கோரத் தாண்டவத்திலிருந்து தப்பவில்லை.
மனிதர்கள் மூலம் மட்டுமே சக மனிதர்களுக்குக் கரோனா பரவும் என்ற நிலை மாறி, தற்போது காற்றிலும் கரோனா பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பது, பொதுமக்களை மேலும் பீதியடையச் செய்துள்ளது. இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கரோனாவின் வேட்டை ஆரம்பமானது. இதன் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக தொடர்ந்துகொண்டே வருவதால்... வேலையிழப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதனால் உண்டாகிய மன அழுத்தம் எனப் பல்வேறு பிரச்னைகளுக்குள் மக்கள் சிக்கி சின்னாபின்னாமாகிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு அனைத்துத் தரப்பினரையும் கதிகலங்கச் செய்துவரும் கரோனாவிற்கு, யாராவது மருந்து கண்டுபிடித்துவிட மாட்டார்களா என மக்கள் ஏங்கித் தவிக்கின்றனர். உலக நாடுகள் அனைத்தும் இதற்கான பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டுவந்தாலும், இதுநாள் வரை கரோனாவிற்கான முறையான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
மருத்துவ ஆராய்ச்சியாளர்களே இதற்கான முயற்சிகளில் தொடர் தோல்வியுற்று, தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் இத்தகைய சூழலில், ”எங்க மூலிகை மைசூர்பா சாப்பிட்டா கரோனா ஒரே நாளில் ஓடிப்போய்விடும்” என்ற அறிவிப்பை வெளியிட்டு கோவையைச் சேர்ந்த ஸ்வீட் கடைக்காரர் ஒருவர் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் தொட்டிபாளையம் பகுதியில் ’நெல்லை லாலா ஸ்வீட்ஸ்’ என்ற பெயரில் இனிப்பு, பலகாரங்கள் விற்கும் கடை ஒன்றை நடத்திவருகிறார். இவர் ’கரோனா ஒரே நாளில் குணமாக எங்கள் கடை மைசூர்பா சாப்பிடுங்கள்’ என்று நோட்டீஸ் அச்சடித்து ஊர் முழுக்க கொடுத்து அமர்க்களப்படுத்தி இருந்தார்.
மேலும், அந்த நோட்டீஸில், ”19 மூலிகைகள் பயன்படுத்தி இந்த மைசூர்பா தயாரிக்கப்பட்டுள்ளது. மைசூர்பாவின் பார்முலாவை பணம், பொருள் என்ற எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இலவசமாக தரவும் தயாராக உள்ளோம். இந்தியா வல்லரசாகும் என்ற அப்துல் கலாம் அவர்களின் கனவை நிறைவேற்றவும், இறந்த அவரது ஆத்மா சாந்தி அடையவும் துணை நிற்போம். கரோனா அறிகுறிகள் இருக்கும் வீட்டிற்குத் தேடிச் சென்று, இதை இலவசமாகக் கொடுக்கவும் தயாராக உள்ளோம்” என்று நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
இந்த நோட்டீஸை பார்த்த கோவை மக்களும் குழப்பத்தில், ”அது எப்படி வாத்தியாரே மைசூர்பா சாப்பிட்டா ஒரே நாள்ல கரோனா எஸ்கேப் ஆகும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், சமூக வலைதளங்களிலும் இந்த நோட்டீஸ் கரோனாவை விட அதிவேகமாகப் பரவியது. ’எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பது போல்’, மக்களிடையே நிலவும் கரோனா அச்சத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற விஷமத்தனங்களை பரப்பி, மக்களிடம் காசு பார்க்க ஒரு கூட்டம் அழைந்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என சமூகச் செயற்பாட்டாளர்களும் மருத்துவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகத் தவறான தகவல் பரப்பிய சித்த வைத்தியர் தணிகாசலம், ஹீலர் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மூலிகை மைசூர்பா என்று வித்தியாசமான மருந்தோடு வந்திருக்கும் இனிப்புக் கடை 'அதிநவீன மருத்துவரான' ஸ்ரீராம் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல தரப்பிலும் குரல் எழுந்துவருகிறது.’
சில நாள்களுக்கு முன் கரோனாவுக்கு எதிராக மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என்று பிரமாண்டமாக விளம்பரபடுத்திய பதஞ்சலி நிறுவனம், மத்திய அரசு ஒத்துழைக்காததால் அந்தர் பல்டி அடித்ததும் நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க:மாத்திரை இல்லை, ஆனா மந்திரம் இருக்கே... கரோனாவை ஒழிக்க ஜீயரின் புது கண்டுபிடிப்பு!