கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் இரண்டு லட்சம் விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறித் தொழிலில் 2 லட்சம் பேர் நேரடியாகவும் 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் பணியாற்றிவருகின்றனர். இந்த விசைத்தறிகளில் நாளொன்றுக்கு ஒரு கோடி மீட்டருக்கும் அதிகமாக காடா துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. பல்வேறு காரணங்களால் உற்பத்தியானது 50 லட்சம் மீட்டராக குறைந்தது. இதனால், பெரும்பாலானோர் விசைத்தறி நெசவுத் தொழிலை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
சோமனூர் கருத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தான் அதிகப்படியான விசைத்தறிகள் உள்ளன. மில் நகரமான கோவைக்கும், பனியன் நகரமான திருப்பூருக்கும் நடுவில் அமைந்துள்ள சேமனூர் விசைத்தறி நகரம் என்றே அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் காடா துணிகள் வடமாநிலங்களுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. அங்கு சாயம் ஏற்றப்பட்டு தரம் வாரியாக பிரிக்கப்பட்டு உள்நாட்டு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
2012ஆம் ஆண்டுக்குப் பிறகு டீசல் விலை உயர்வு, விசைத்தறிக்காண உதிரிபாங்களின் விலை உயர்வு, 100 விழுக்காடு மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் விசைத்தறி தொழிலானது அழிவின் விளிம்புக்குச் சென்றுள்ளது. இதுபோக, ஒரு ஊழியரை வைத்து வைராக்கியத்துடன் விசைத்தறிகளை இயக்கி வந்தவர்களும் தற்போது இந்த கரோனா ஊரடங்கால் தள்ளாடிவருகின்றனர். ஊரடங்கு காரணமாக உற்பத்தி முடங்கியதால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாத விசைத்தறி உரிமையாளர்கள், தறிகளை பழைய இரும்பு விலைக்கு விற்றுவருகின்றனர். விதைத்தறிகளின் இதயமாக இருந்த இப்பகுதியிலுள்ள விசைத்தறிகள் இரும்புக்கடைக்குச் செல்வதால் இப்பகுதியில் விசைத்தறிகள் இருந்ததற்கான அடையாளங்கள் குறைந்து வருகின்றன.
தனக்குச் சொந்தமான பத்து தறிகளை விற்பனை செய்த விசைத்தறி உரிமையாளர் கதிர்வேல் சாமி பேசுகையில், "கூலிப் பிரச்னை, மின் கட்டண உயர்வு எனப் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே விசைத்தறி ஓட்டி வந்தோம். தற்போது கரோனா ஊரடங்கினால் தொழிலை நடத்த முடியாமல் தவிக்கிறோம். வாங்கிய கடனுக்கு வட்டிகட்ட முடியவில்லை. எனவே, ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் கொடுத்து வாங்கிய விசைத்தறியை பழைய இரும்பு விலைக்கு விற்றுவருகிறோம். தமிழ்நாடு அரசு எங்கள் நலனைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
விசைத்தறி உரிமையாளர்களின் நிலையை படுபாதாளத்திற்கு சென்றுவிட்ட போது விசைத்தறித் தொழிலாளர்களின் நிலையை கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை. கடந்த 20 வருடங்களாக விசைத் தறிதொழிலையே செய்து வந்த தொழிலாளர்களுக்கு வேறு வேலை எதுவும் தெரியாததால் அவர்கள் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர்.
அதில் ஒருவராக இருக்கும் விசைத்தறி தொழிலாளி சிதம்பர நாதன், "அருகிலுள்ள விசைத்தறிக் கூடங்களில் இரண்டு நாட்கள் வேலைக்குச் செல்கிறேன். அதைவைத்து தான் குடும்பச் செலவுகளை சமாளிக்கவேண்டியதாய் உள்ளது. விசைத்தறி நகரம் என்று அழைக்கப்பட்டு வந்த சோமனூர் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த தொழிலை நம்பி ஹோட்டல்கள், பேக்கரி மற்றும் தறி தொழிலுக்கான உதிரிபாகங்கள் விற்பனை கடைகள் என பல லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர் அவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கும் உள்ளது" என்று கண்ணீர் விடாத குறையாக தெரிவிக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே இத்தொழிலின் முன்னேற்றம் குறைந்துவந்த நிலையில், தற்போது கரோனா சூழலில் 50 விழுக்காடு உற்பத்தி முடங்கிபோய்விட்டது. விசைத்தறிகள் பழைய இரும்புக்கடைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து விளிம்பு நிலையில் உள்ள இத்தொழிலை மீட்டெடுத்து இதை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
இதையும் படிங்க: முடிவுரையை நோக்கி கைத்தறி தொழில் - கடைசி தலைமுறையையாவது காப்பாற்றுமா அரசு?