கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
எனவே, வாழ்வாதாரம் இழந்து வாடும் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு தமிழ்நாடு அரசு 1000 ரூபாயும், ஒரு மாதத்திற்கான ரேஷன் பொருட்களும் கரோனா நிவாரணமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
அதனடிப்படையில், கரோனா நிவாரண தொகை 1000 ரூபாய் மற்றும் இலவச ரேஷன் பொருள்கள் இன்று முதல் வழங்கப்படுகிறது. இதற்கென டோக்கன் வழங்கப்பட்டது. இந்நிலையில், டோக்கன் வாங்கியவர்கள் மட்டுமே சமூக இடைவெளி விட்டு நிவாரண பொருள்களை வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதன் பேரில் கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரில் டோக்கன் பெற்ற மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி நிவாரண பொருள்களைப் பெற வந்தனர். குனியமுத்தூர் பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சமூக இடைவெளி விட்டு காத்திருந்த மக்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் மற்றும் 1000 ரூபாயை வழங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா நிதியாக ரேஷன் பொருள்கள் மற்றும் 1000 வழங்க தமிழ்நாடு அரசு ரூ.3,280 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கோவையில் 9.77 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த நிவாரண நிதி மற்றும் இலவச பொருள்கள் வழங்கப்பட உள்ளது.
கோவையில் 1,418 நியாயவிலைக் கடைகளில் நிவாரண பொருள்கள் வழங்கப்படும். இதனைக் கண்காணிக்க ஒவ்வொரு வட்டத்திற்கும் வட்டாசியர் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், கோவை முழுவதும் 100 நடமாடும் காய்கறி வண்டிகள் திட்டத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: உலகை உலுக்கும் கரோனா: நிமிடத்துக்கு நிமிடம் உயிரிழப்பு!