மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் மத்திய அரசை கண்டித்தும் வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று (டிச.9) கோயம்புத்தூர் சூலூர் பகுதியில் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்தும் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். அவர்களை காவல்துறையினர் கலைந்து போகும் படி கூறியதால் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது.
இந்நிலையில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். உடனடியாக காவல்துறையினர் தண்ணீர் ஊற்றி அதனை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.