சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் மூன்று வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தாய் ரூபிணியிடம் இன்று காலை சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், தனது கணவர் பால்ராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழ் என்பவருடன் கடந்த சில தினங்களாக வாழ்ந்து வருவதாக ரூபிணி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு குழந்தை தேவிஸ்ரீயை தமிழ் வெளியே அழைத்துச் சென்ற நிலையில் இன்று காலை சடலமாக கீரணத்தம் சாலையில் உள்ள கரட்டு மேடு என்ற இடத்தில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம், குறித்து விசாரணை நடத்த மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திருமணத்தை மீறிய உறவால், மூன்று வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது