கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (40) இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான 32 வயது பெண்ணிற்கும் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு இருந்துவந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் இவ்விவகாரம் பெண்ணின் வீட்டிற்குத் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சந்திரன் மலுமிச்சம்பட்டிக்கு குடிபெயர்ந்தார். இருப்பினும் அந்தப் பெண்ணை மீண்டும் உடலுறவு கொள்ள அழைத்துள்ளார். ஆனால் இதற்கு அந்தப் பெண் மறுத்திட, ஆத்திரமடைந்த சந்திரன் அந்தப் பெண்ணின் ஆபாச புகைப்படத்தை குடும்பத்தினருக்கு அனுப்பிவிடுவேன் என்றும் சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என்றும் மிரட்டல்விடுத்துள்ளார்.
இதனையடுத்து அந்தப் பெண் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரினைத் தொடர்ந்து சந்திரனை கைதுசெய்த காவல் துறையினர், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை, ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைச் சிறையில் அடைத்தனர்.