கோவை: தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் காட்டு யானைகள் உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஒற்றை மக்னா யானை குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் சுற்றித் திரிந்தது.
பயிர்களை சேதப்படுத்தி வந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால், அந்த யானை வனப்பகுதிக்குள் செல்லாமல், தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திக் கொண்டே வந்தது. இந்த மக்னா யானையைப் பிடிக்கக்கோரி விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து மக்னா யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். அதன்படி, கடந்த 5ஆம் தேதி பெரியூர் ஈச்சம்பள்ளம் பகுதியில் கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி மக்னா யானையைப் பிடித்தனர். அதனை வரகழியாறு வனப்பகுதியில் விடுவித்தனர்.
கடந்த 10 நாட்களாக வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்த மக்னா யானை திடீரென நேற்று(பிப்.21) சேத்துமடை கிராமத்திற்குள் நுழைந்தது. பின்னர் அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் சென்றது. பின்பு கிணத்துக்கடவு, நல்லிகவுண்டன்பாளையம், வழுக்குப்பாறை, முத்துக் கவுண்டனூர், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளை கடந்து கோவை மாநகர பகுதிகளை அடைந்தது.
பின்னர் சேலம் - பாலக்காடு புறவழிச்சாலையை கடந்த மக்னா யானை, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிக்கிற்குள் நுழைந்தது. குரும்பபாளையம் பகுதியில் எதிரே வந்த ஒருவரை யானை தும்பிக்கையால் தள்ளிவிட்டு சென்றது. இதில் அவர் காயமடைந்தார். மக்னா யானை தற்போது செந்தமிழ் நகர் பகுதியில் முகாமிட்டுள்ளது.
இது தொடர்பாக இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஜலாலூதீன் கூறும்போது, "தந்தம் இல்லாத இந்த ஆண் மக்னா யானை தற்போது வரை 140 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்துள்ளது. கிராமங்களைக் கடந்து தற்போது நகரப் பகுதிக்கு வந்துள்ளது. யானையை மாலை நேரத்தில் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்த யானையால் மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை. யாரையும் தொந்தரவு செய்யவில்லை. வழி தெரியாமல் நகரப் பகுதிக்குள் சுற்றி வருகிறது" என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: உங்கள் இல்ல நிகழ்வுகளில் உணவு மீதம் ஆகிறதா? - காவல் கரங்கள் காத்திருக்கிறார்கள்!