கோயம்புத்தூர்: பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ஆம் ஆண்டு பிறந்தவர் நானம்மாள். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நானம்மாள், தன்னுடைய தாத்தா மன்னார்சாமியிடமிருந்து யோகாசன பயிற்சிகளைக் கற்றுக்கொண்டார்.
தனது 10 வயதில் யோகா கற்க ஆரம்பித்தவர், 98 வயதிலும் செய்துவந்தார். சர்வாங்காசனம், மச்சாசனம், யோகமுத்ரா, வஜ்ராசனம், ஹாலாசனம், தூலாசனம், பச்சிமோதானாசனம் போன்ற 50 கடினமான ஆசனங்களையும் எளிதில் செய்து அசத்தக் கூடியவர் நானம்மாள்.
கோவை மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பிரபலமானவர். யோகா பாட்டி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். தான் கற்ற கலையைப் பல லட்சம் பேருக்குக் கற்றுக்கொடுத்த ஆசான் 2019ஆம் ஆண்டு வயது முதுமை காரணமாகக் காலமானார்.
![சிபிஎஸ்சி பாடத்தில் நானம்மாள் குறித்த தகவல்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-01-yoga-patti-visu-byte-7208104_30092021131651_3009f_1632988011_372.jpg)
யோகா குறித்து தெரிந்துகொள்ள நல்வாய்ப்பு
இவரது பெருமையை நாடு முழுவதும் அறியச் செய்யும்விதமாக சிபிஎஸ்இ பாடத்தில் நானம்மாள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து யோகா பாட்டி நானம்மாளின் மகன் பாலகிருஷ்ணன் கூறுகையில்,
"சிபிஎஸ்சி 11ஆம் வகுப்பு உடற்கல்வி பாடப் புத்தகத்தில் எனது தாய் நானம்மாள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அடையாளம். 45 ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்களை உருவாக்கியுள்ளார்.
இதில் 600-க்கும் மேற்பட்டோர் யோகா ஆசிரியர்களாக உள்ளனர். எனது தாய் 99 வயது வரை பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்று யோகா பயிற்சி அளித்துள்ளார். சிறு வயது முதல் யோகா செய்துவந்ததால் எந்த ஒரு உடல் நலக் குறைவுமின்றி வாழ்ந்துவந்தார். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
2018ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் எனது தாய் குறித்த தகவல்கள் வந்துள்ளது, இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்துத் தெரிந்துகொள்ள நல்வாய்ப்பாக அமையும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிடிஆரை கடுப்பேற்றிய பாதுகாப்பு அலுவலர்: காரணம் இதுதானா!