கோவை மாவட்டம், அதிமுக முன்னாள் கவுன்சிலர் எஸ்.ஆர்.அர்ஜூனன். இவரின் நடவடிக்கை பிடிக்காததால், அவருடன் கட்சியில் இருந்த ஸ்ரீராமுலு என்பவர், கோவை மாவட்ட திமுக உறுப்பினர்களுடன் சேர்ந்து சிறிது காலமாக பணிபுரிந்து வருகிறார்.
இதையறிந்த அர்ஜூனன், திமுகவுக்கு பணியாற்றக் கூடாது என்று ஸ்ரீராமுலுவை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பொருட்படுத்தாமல் ஸ்ரீராமுலு, தொடர்ந்து திமுகவில் பணியாற்றி வந்தார்.
இதில் ஆத்திரமடைந்த அர்ஜூனன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சரவணம்பட்டி அருகே நின்ற ஸ்ரீராமலுவை, தாங்கள் வந்த காரில் ஏற்றி கீரணத்தம் என்ற பகுதியில் அர்ஜூனனுக்கு சொந்தமான பார் முன்பு கடுமையாக தாக்கினர்.
இந்த நிலையில், பாரில் இருந்து படுகாயங்களுடன் தப்பி வந்த ஸ்ரீராமுலு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர், தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்ரீராமுலு காவல்துறையிடம் புகார் அளித்தார்.
தொடர்ந்து ஸ்ரீராமுலு, தன்னை தாக்கியவர்கள் மீது அதிமுக மேலிடமும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வீடியோ ஒன்றையும், தன்னை தாக்கி சம்பவம் பற்றிய சிசிடிவி காட்சிகளையும் வெளியீட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும் மற்றதைப் பற்றி பிறகு பேசலாம் - வைகைச்செல்வன்