கோவை மாவட்டம் காரமடை அடுத்த பில்லூர் வனப்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. அப்பகுதியில் யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக நீலகிரி மாவட்டம் உதகைக்கு, சாலை அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் சிற்றுந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்களை அவ்வப்போது யானைகள் வழிமறிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று கோவையில் இருந்து பில்லூர் அணை வழியாக சென்ற அரசுப் பேருந்தை குட்டியுடன் வந்த மூன்று யானைகள் கொண்ட கூட்டம் வழிமறித்தது.
இதில் பெண் யானை ஒன்று பேருந்தின் முன் பகுதியில் வந்து மோதியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பேருந்தை பின்பக்கமாக ஓட்டுநர் இயக்கினார். இருப்பினும் அந்த மூன்று யானைகளும் சாலையில் வந்து நின்றுகொண்டு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக நகராமல் அங்கேயே இருந்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றதை அடுத்து பேருந்து உதகைக்கு சென்றது.
இதையும் படியுங்க: ஆட்சியர் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை