கோயம்புத்தூர் மாநகராட்சியில் காவல்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் சார்பில் கோவை மாநகராட்சியில் ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ், என்.எஸ்.ஆர் சாலை ஆகியப் பகுதிகளில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆடல் பாடல்கள், பல்வேறு பழங்கால விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவை இடம் பெறுகின்றன. அதுமட்டுமின்றி உடற்பயிற்சியும் கற்றுத்தரப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் ஓவியர்கள், நடனக் கலைஞர்கள் உள்ளிட்டோரும் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் வாரந்தோறும் நடைபெறும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில், கோவை மாநகரப் பகுதிகளில் வசிக்கும் பல்வேறு மக்கள் கலந்து கொள்கின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் கலந்து கொண்டு ஆடல் பாடல் என உற்சாகமாக கொண்டாடுகின்றனர். இதில் பல்வேறு பொதுமக்கள் அவர்களது தனித்திறமைகளையும் வெளிப்படுத்தி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர்.
இதையும் படிங்க :விரைவில் கோவையில் முதலமைச்சர் - அமைச்சர் முத்துசாமி தகவல்
அதன் தொடர்ச்சியாக சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் இந்த வாரமும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்துகொண்டு ஆடல் பாடல்கள் என உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இம்முறை கூடுதலாகப் பல்வேறு விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. மக்களே விளையாடும் பெரிய அளவிலான பரமபத விளையாட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் ஆகிய விளையாட்டுகள் இடம்பெற்றிருந்தன. இதில் மாற்றுத்திறனாளிகள் வாலிபால் விளையாடியது அங்கிருந்து அனைவரையும் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் வாழ்த்தியது.
வாரம் 6 நாட்கள் தொடர்ந்து பணிபுரியும் தங்களுக்கு வாரம் ஒரு முறை இது போன்று நிகழ்ச்சி நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இதில் கலந்து கொள்பவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு விளையாடியது அங்கிருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதுபோன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விளையாடுவது தங்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிப்பதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் மத்தியில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்னும் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு உள்ளதால் இதேபோன்ற அனைத்து பெரு நகரங்களிலும் அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடத்திட வேண்டும் மற்ற மாவட்ட பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க :"தக்காளி ரூ.150 விற்றாலும் நாங்கள் கடனாளி தான்" - கோவை விவசாயி வேதனை.. சிறப்பு தொகுப்பு!