திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் ஆலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கு கார்த்திகா என்னும் மனைவியும், ஒன்றரை வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழக்கம்போல குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, நிலக்கடலை சாப்பிட்டதாகத் தெரிகிறது. இதனால், அது மூச்சுக்குழாய்க்குள் சென்று சிக்கிக் கொண்டது.
பின்னர், குழந்தை மூச்சுவிட முடியாமல் அழத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்த பெற்றோர் உடனே அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையின் நிலைமை மோசமடைந்ததால், கோவை அரசு மருத்துவனைக்கு கொண்டுவந்தனர்.
கோவை அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ் அறிவுரையின்படி, காது மூக்கு தொண்டைப் பிரிவுத் துறைத் தலைவர் அலிசுல்தான், மயக்க மருந்தியல் மருத்துவர் சதீஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் குழந்தைக்குச் சிகிச்சையளித்தனர்.
அப்போது டிரக்கியா என்னும் முக்கிய மூச்சுக்குழாயில், அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அறுவை சிகிச்சையின்றி, மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவி வாயிலாக, உள்ளே அடைத்திருந்த நிலக்கடலையை மருத்துவர்கள் அப்புறப்படுத்தினர்.
அறுவை சிகிச்சையின்றி குழந்தையின் உயிரைக் காப்பாற்றி சாதனை படைத்த மருத்துவர்களுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும், சிகிச்சைக்குப் பின்னர் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.