கோவை ஆர்.எஸ். புரம் அப்பகுதியில் உள்ள வனத் துறை அலுவலகத்தில் வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று (ஜூன் 10) ஆய்வுமேற்கொண்டார்.
வனத் துறைக்குச் சொந்தமான இடங்கள் குறித்தும் ஆக்கிரமிப்பு இடங்கள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டு அறிந்து அதற்கான நடவடிக்கை எடுத்து அந்த நிலங்களை மீண்டும் வனத் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர அறிவுரை வழங்கினார்.
மேலும் கோவையில் வனத் துறையினரால் பறிமுதல்செய்யப்பட்ட யானை தந்தங்கள், துப்பாக்கிகள், இதரப் பொருள்கள் குறித்து ஆய்வுமேற்கொண்டார்.
வனவிலங்குகளைக் காட்டுக்குள் விரட்ட பயன்படுத்தப்படும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட அவர் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் வனவிலங்குகளைத் துன்புறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் வனத் துறைக்குச் சொந்தமான இடங்களை யாராயினும் ஆக்கிரமிப்புச் செய்தால் பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காட்டுப்பகுதியை அதிகப்படுத்துவதே நமது நோக்கம் என்றும் கூறினார்.
யானைகள் துன்புறுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும், யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்தால் உடனடியாக வனத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும், காட்டுப் பகுதியை ஒட்டி உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து வன விலங்குகளை விரட்டும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் வனத் துறை அலுவலகத்தில் வனத் துறை செலவினங்கள் பராமரிப்புகள் மற்றும் வனத் துறைக்குச் சொந்தமான கல்லூரி போன்றவற்றின் கோப்புகளை ஆய்வுசெய்தார்.