கோயம்புத்தூர்: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், கார வகைகள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவுப் பொருட்களை மக்கள் விரும்பி வாங்குவது உண்டு. கடைகளில் தயார் செய்யப்படும் இந்த இனிப்பு, கார வகைகள் தரமாக செய்யப்படுகிறதா என உணவு பாதுகாப்புத் துறையினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி, கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒரு வார காலமாக கோவையில் இயங்கும் கடைகளில் சோதனை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று (நவ.7) ஆர்.எஸ்.புரம், காந்தி பார்க், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் கீரநத்தம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் ஸ்வீட்ஸ் தயாரிப்பு கடை குடோனில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது லட்டு, பாதுஷா, மோதி லட்டு, ஜிலேபி உள்ளிட்ட பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் எண்ணைய்யை பயன்படுத்தக் கூடாது எனவும், அப்படி பயன்படுத்தினால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
மேலும் கடையில் இனிப்பு வகைகளை தயார் செய்ய மீண்டும் மீண்டும் பயன்படுத்தபட்ட 900 லிட்டர் எண்ணெய்யை பறிமுதல் செய்தனர். நிறமிகள் அதிகமாக உள்ள 44 கிலோ லட்டு, 32 கிலோ ஜிலேபி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றின் மீது பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: “ஒரு காசு கூட கைப்பற்றவில்லை” - அமைச்சர் எ.வ.வேலு கண்ணீர் மல்க பேட்டி!