கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பெத்திகுட்டை பகுதியில் நூற்றுக்கணக்கான யானைகள் உள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள வாழை, தென்னை ஆகியவற்றைச் சாப்பிடுவது வழக்கம்.
யானைகள் தொடர்ச்சியாக வேளாண் நிலத்திற்குள் செல்வதால் அப்பகுதி விவசாயிகள் தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளனர். பேட்டரி மூலம் மின்வேலி அமைக்க அனுமதி பெற்று இருந்தாலும் ஒரு சில விவசாயிகள் நேரடியாக உயர் மின்னழுத்தத்தை மின்வேலியில் செலுத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பெத்திகுட்டையில் முருகேஷ் என்பவருக்குச் சொந்தமான தேரங்கிணறு தோட்டத்தில் இன்று (நவம்பர் 18) அதிகாலை மின்வேலியில் சிக்கி ஆண் யானை இறந்து கிடப்பதாக சிறுமுகை வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிர் மின்னழுத்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
மேலும் வனப்பகுதியிலிருந்து வாழைத் தோட்டத்துக்குள் புகுந்த யானை வாழைகளைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லும்போது இந்தச் சம்பவம் நடைபெற்றதும் தெரியவந்தது.
இதனை அடுத்து தோட்ட உரிமையாளர் முருகேஷ் என்பவரை விசாரணைக்காக வனத் துறையினர் அழைத்துச் சென்றனர் அப்போது அங்கு வந்த இளைஞர்கள் சிலர் வனத் துறையினரிடமிருந்து முருகேஷனை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து சிறுமுகை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் விவசாயி முருகேஷ் அழைத்துசெல்லப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். யானையின் உடலை உடற்கூராய்வு செய்து அங்கேயே புதைக்கப்பட இருக்கின்றன.
ஏற்கனவே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் உள்ள மின் வேலிகளை அகற்ற வேண்டும் என நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும் ஒரு சில இடங்களில் இந்த உத்தரவை மீறி மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதால் உடனடியாக அவற்றைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் கடந்த 11 மாதங்களில் 21 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.