திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக வழக்கறிஞர் கிரிராஜன் இன்று தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலின் போது நடைபெற்ற வாக்குப்பதிவில் வன்முறை நிகழ்ந்துள்ளது என்று ஏற்கனவே திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் அளித்துள்ளார். மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் மிகுந்த எச்சரிக்கையுடனும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும்.
இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில், 'கூடுதல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும், கூடுதல் பாதுகாப்பிற்கு துணை ராணுவத்தினை வரவழைக்க வேண்டும், வாக்குப்பதிவு தொடங்கியது முதல் முடியும் வரை வெப் காஸ்ட் செய்ய வேண்டும், ஊடக துறையினர் கண்கானிப்பின் கீழ் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு ஊடங்களில் ஒளிபரப்ப வேண்டும், அடையாள அட்டை இல்லாதவர்களை வாக்குச்சாவடிகளுக்குள் அனுமதிக்கக் கூடாது, பாப்பிரெட்டிபட்டியில் இருக்கின்ற எட்டு வாக்குச்சாவடிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாக்களிக்க வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்' என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என தெரிவித்தார்.