கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம், மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், பையா கவுண்டர், சேனாதிபதி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்த திமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
அலுவலகம் முற்றுகை
200க்கும் மேற்பட்ட திமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்ததன் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தின் வாயில் கதவுகள் மூடப்பட்டன. இதனால், ஆவேசமடைந்த திமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கதவுகளை சத்தமாக தட்டி, கதவை திறந்து உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தமிழ்நாடு அரசையும், அதிமுகவையும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினருடன் காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், திமுகவினர் தொடர்ச்சியாக கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தபடி இருந்தனர்.
மனு அளிப்பு
அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இல்லை என தெரிவித்த காவல் துறையினர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் திமுக நிர்வாகிகளை அழைத்துச் சென்றனர். அவரிடம் கோரிக்கைகள் குறித்த மனுவினை வழங்கிய திமுக நிர்வாகிகள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக, அரை மணி நேரத்திற்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை
இதனிடையே, திமுக கிராம சபை கூட்டங்களுக்கு அனுமதி தராத காவல் துறையை கண்டித்து இன்று மாலையில் காவல் துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக திமுகவினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திமுகவினர் கோவை மாநகருக்கு கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வருகை தர உள்ளனர். அவ்வாறு வரும் திமுகவினரை மாநகர எல்லையிலேயே தடுத்து நிறுத்த காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தடையை மீறி நடத்தவிருந்த மக்கள் சபைக்கூட்டம்; 300க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது