கோவை கவுண்டம்பாளையம் அருகிலுள்ள லூனாநகர் அப்பாஸ் கார்டன் 2ஆவது வீதியில் வசித்துவருபவர் கனகராஜ் (59). பில்டிங் காண்ட்ராக்டரான இவர், தனது மகள் திருமண ஏற்பாடுகளைச் செய்துவந்துள்ளார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று (நவ.20) வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோவையிலுள்ள கோவிலுக்குச் சென்றனர். மாலை 7 மணிக்கு வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பகுதியில் கட்டியிருந்த அவர்களது நாய் மயங்கி கிடந்துள்ளது. முன்பக்க கதவின் தாழ்பாள் உடைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த 130 சவரன் நகைகள், 15 லட்சம் ரூபாய் ரொக்கம், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
வீட்டைச்சுற்றி வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.விக்கள் அனைத்தும் திருப்பி வைக்கப்பட்டு, அதன் ஹார்டுடிஸ்க்கையும் கொள்ளையர்கள் எடுத்துச்சென்றனர். மேலும், அவர்கள் வீட்டு நாய்க்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து மயக்கமடைய செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்களை வைத்து அங்குள்ளவற்றை பதிவு செய்தனர்.
மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வேலை கேட்டுச்சென்று நோட்டமிட்டு கொள்ளையடித்த தாய், மகன் கைது