கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியில் காங்கிரஸ் கொடி கம்பத்தின் மீது, மது பாட்டிலில் சிறுநீர் கலந்து ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, பா.ஜ.க, வி.சி.க உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தங்களின் கட்சி கொடி கம்பங்களை வைத்துள்ளனர்.
அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஆனைமலை, சேத்துமடை, முக்கோணம், நா.மூ.சுங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் தங்களது கட்சி கொடி கம்பங்களை வைத்துள்ளனர். கோட்டூர் மதுரை வீரன் கோயில் அருகே காங்கிரஸ் கொடி கம்பம் உள்ளது.
இந்நிலையில், மது பாட்டிலில் சிறுநீர் கலந்து அந்த கொடி கம்பத்தில் மர்ம நபர்கள், நேற்று இரவு (செப். 24) ஏற்றியதாக கூறப்படுகிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், கோட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததின் பெயரில் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து, ஆனைமலை காங்கிரஸ் கமிட்டி தலைவர் பூபதி தலைமையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கோயம்புத்தூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெகமம் பகுதியில், பெரியாரின் மார்பளவு சிலைக்கு சாணத்தை மர்ம நபர்கள் வீசி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கொடி கம்பத்தின் மீது மது பாட்டிலில் சிறுநீர் கலந்து ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: இபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! அதிமுக- பாஜக குறித்து முக்கிய முடிவு வெளியாகும் எனத் தகவல்!