கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், சிறுமுகை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 12 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் சிறுமுகையில் மூடிக்கிடக்கும் தொழிற்சாலை வளாகத்துக்குள் முகாமிட்டன.
அதன்பின்னர் காட்டுயானைகள் பவானி ஆற்றைக்கடந்தபடி சென்று, சிறுமுகை அடுத்துள்ள லிங்காபுரம் கிராமத்தில் உள்ள வாழைத்தோட்டங்களில் புகுந்து வாழைகளை சேதப்படுத்தின. இதனையடுத்து யானைகள் அங்கிருந்து வெளியே செல்ல முயன்றது.
ஆனால், பவானி ஆற்றில் நீர்ப்பெருக்கு அதிகரித்ததால், யானைகளால் ஆற்றைக்கடந்து வனப்பகுதிகளுக்குள் இடம் பெயர முடியவில்லை. இதனால், அங்கேயே முகாமிட்ட காட்டுயானைகள் அங்கும் இங்குமாக உலா வந்தன. இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
யானைகளை காட்டுக்குள் விரட்டிய வனத்துறையினர்
தகவல் கிடைக்கப்பெற்றதும் சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விவசாயத்தோட்டங்களில் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது வனத்துறையினரால் விரட்டப்பட்ட காட்டு யானைகள், அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் அங்குமிங்கும் புகுந்து விவசாய பயிர்களைச் சேதம் செய்துவிட்டு, மீண்டும் பவானி ஆற்றைக்கடந்து பெத்திக்கூட்டை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன.
வனத்துறையினர் சுமார் 8 மணி நேரம் போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். கடந்த சில தினங்களாக லிங்காபுரம் கிராமப்பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் புகுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விமானப்படை அலுவலர் அமிதேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு