கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு (மே.7) பள்ளிவாசலில் பாங்கு ஓதசென்ற ஜாகிர் உசேன் என்பவர் மேல் தளத்தில் உள்ள கதவுகளின் கண்ணாடி உடைந்து கிடந்தையும், பக்கத்தில் கல் கிடந்ததைய்ம் இருப்பதையும் பார்த்துள்ளார். இதனையடுத்து, அவர் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பள்ளிவாசலை ஆய்வு செய்தபோது பள்ளிவாசலை ஒட்டியுள்ள தேவையம்பாளையம் சாலையில் சென்றவர்கள் கற்களை வீசியிருக்கலாம் என தெரியவந்தது. இதனையடுத்து, அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், அவ்வழியாக வந்த இளைஞர்கள் சிலர் பள்ளிவாசல் பின்புறம் செல்வதும் பின்னர் திரும்பி ஓடுவதும் பதிவாகியுள்ளது.
இந்தக் காட்சிகளை கொண்டு இளைஞர்கள் கற்களை வீசி இருக்கக்கூடும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். பள்ளிவாசல் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஜம்முவில் வீரமரணம் அடைந்த தமிழக வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்