கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக கடந்த மூன்று ஆண்டுகளாக அசோகன் என்பவர் பணிபுரிந்து வந்தார். தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு கரோனா தொற்று சிகிச்சை அளிப்பதற்காக சென்றுவரும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கும் பயிற்சி மருத்துவர்களுக்கும் தங்குமிடம் செய்து தரப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சென்று வந்த இரண்டு முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டது. அவர்கள் இருவரும் உணவு விடுதிக்குச் சென்று வந்ததால், அங்கு பணியாற்றியவர்கள் வெளியேறி விட்டனர். இதனால் அங்குள்ள 400க்கும் மேற்பட்டோருக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதற்கெல்லாம் காரணம் முதல்வர் அசோகன் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் சுகாதாரத்துறை செயலாளருக்கும், சுகாதாரத்துறை உயர் அலுவலர்களுக்கும் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 16) கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த மாற்றத்திற்கான உத்தரவை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வழங்கினார். அதைத் தொடர்ந்து அந்த பதவிக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமூகம் மருத்துவத் துறை தலைவராக இருந்த மருத்துவர் காளிதாஸ் பொறுப்பேற்றுள்ளார். மேலும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பொறுப்பை கூடுதல் கவனம் கொடுத்து செயலாற்ற வேண்டும் என்று பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க... கரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு சரியான உணவு வழங்காத மருத்துவமனை நிர்வாகம்!