கோயம்புத்தூர்: வருகின்ற 17-ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ள தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கில் கலந்து கொள்ள, அனைத்து ஜவுளித் தொழில்முனைவோர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் துணிநூல், ஆயத்த ஆடைகள் மற்றும் சந்தையில் தொழில்நுட்ப ஜவுளிகள் 13 சதவீதம் பங்களிப்பு வழங்குகின்றன.
தொழில்நுட்ப ஜவுளித்துறை ஆண்டிற்கு 12 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. 2030-ஆம் ஆண்டிற்குள் சந்தை மதிப்பில் 45 பில்லியன் அமெரிக்கா டாலர் அளவிற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் தொழில்நுட்ப ஜவுளித்துறை நேரடியாக 12 லட்சம் நபர்களுக்கும், மறைமுகமாக 50 லட்சம் நபர்களுக்கும் வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது.
இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) மூலமாக வருகின்ற 17.11.2023 அன்று கோயம்புத்தூரில் உள்ள ஹோட்டல் லீ மெரிடியனில், தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித் துறை மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) ஆகியவை இணைந்து தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கம் நடத்த உள்ளன.
மேற்படி கருத்தரங்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வல்லுநர்கள் தொழில்நுட்ப ஜவுளி துறையில் உள்ள வாய்ப்புகள், வளர்ச்சி, புதிய முதலீடுகள், பன்னாட்டு சந்தை மற்றும் அதனுடைய போக்கு குறித்துக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ளுவதற்கு இணையதளம் உள்ளது. முன்பதிவு செய்வதற்கான இணைப்பும் (https://bit.ly/CIITechnicalTextiles) வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஜவுளித்தொழில் கருத்தரங்கில் ஜவுளி தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், தொடர்புகொள்ள வேண்டிய முகவரி, மண்டல துணை இயக்குநர் சு.இராகவன்- 9443570745,
மண்டல துணை இயக்குநர் அலுவலகம், அறை எண்.502, ஐந்தாவது தளம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்,
திருப்பூர்-641804.
மேலும், இது குறித்த சந்தேகங்களுக்கு மின்னஞ்சல்: rddtextilestpr@gmail.com தொலைபேசி எண்: 0421 2220035, 9442186070, 9750160503 தொடர்புகொள்ளவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் மும்முரம்.. தலைமை தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் நாளை ஆலோசனை!