கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், பீளமேடு காந்திமாநகர் பகுதியில் ஷெரிப் என்பவர் எஸ்.எஸ்.பைக் பாயின்ட் என்ற பெயரில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரிடம் வேலை பார்த்து வருபவர் ரவிக்குமார். நேற்று(ஜூன் 15) மாலை ரவிக்குமார் மட்டும் கடையில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் மூன்று பேருடன் கடைக்கு வந்துள்ளனர்.
மூன்று பேரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், வாகனம் தொடர்பாக உரிமையாளர் ஷெரிப்பிடம் பேச வேண்டும் என அவர்கள் கூறவே, ரவி தனது செல்போன் மூலம் ஷெரிப்பிற்கு அழைத்துள்ளார். அதில் பேசிய அவர்கள், பின்னர் செல்போனை திருப்பிக் கொடுக்காமல் அவர்களிடம் வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ரவி தனது செல்போனை திருப்பி கொடுக்கும்படி அவர்களிடம் கேட்கவே பிரச்னை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் செய்துள்ளனர். மதுபோதையில் இருந்த அவர்கள் கடையில் இருந்த அரிவாளை எடுத்து ரவியைத் தாக்கியுள்ளனர். இதில் ரவிக்குமார் கையில் பலத்த காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ரவிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: வாகன நிறுத்தத்திற்கு அதிக கட்டணம் வசூல்- புகார் அளிக்க புதிய எண்