கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள எல்லன் மருத்துவமனையை அதன் உரிமையாளர் ராமச்சந்திரன், சென்னையைச் சேர்ந்த மருத்துவர் உமா சங்கர் என்பவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டில் வாடகைக்கு விட்டிருந்தார். எனவே, டாக்டர் உமா சங்கர் அந்த மருத்துவமனையை, ‘சென்னை மருத்துவமனை’ எனப் பெயர் மாற்றம் செய்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் இருவரிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே, டாக்டர் ராமச்சந்திரன் அடியாட்களுடன் மருத்துவமனைக்குள் நுழைந்து, ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை விரட்டி விட்டு மருத்துவமனையைக் கைப்பற்றினார். மேலும் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி டாக்டர் உமா சங்கர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்.
பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த டாக்டர் உமா சங்கர், சந்தேகத்திற்கு இடமான வகையில் கார் மோதி உயிரிழந்தார். தொடர்ந்து ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், டாக்டர் உமாசங்கர் மீது பொய் வழக்குப்போடப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதன் பின்னணியில் காவல் துறையினர் சிலரும் உடந்தையாக இருந்திருப்பதும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து டாக்டர் ராமச்சந்திரன், டாக்டர் காமராஜ் மற்றும் கூலிப்படையினர் என 13 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டாக்டர் ராமச்சந்திரனுக்கு உறுதுணையாக அடியாட்களை ஏற்பாடு செய்தது கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ராஜேந்திரன் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து ராஜேந்திரனை சிபிசிஐடி காவல் துறையினர், விசாரணைக்கு அழைத்த நிலையில் அவர் தலைமறைவானார். மேலும் வழக்கறிஞர் ராஜேந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கறிஞர் ராஜேந்திரன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் நிலையில், அவரைப் பிடிக்க சிபிசிஐடி தரப்பில் மூன்று தனிப்படைகள் அமைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று வழக்கறிஞர் ராஜேந்திரனின் சாய்பாபா காலனியில் உள்ள வீடு, அவருக்குச் சொந்தமான லாட்ஜ் மற்றும் அலுவலகம், காந்திபுரத்தில் உள்ள அவரது மற்றொரு வீடு ஆகிய மூன்று இடங்களில் இன்று காலை முதல் சிபிசிஐடி டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்தச் சோதனையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் சோதனை நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாமூல் கேட்டு தர மறுத்த மளிகை கடை உரிமையாளர் மகன் கடத்தல்