பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். இந்த முறையும் வழக்கம் போல் தமிழக நெட்டிசன்கள் அவரை திரும்பிச் செல்லுமாறு திரும்பிப் போ மோடி (#GoBackModi) என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கியுள்ளனர்.
எதனை ஆயுதமாகக் கொண்டு பாஜக ஆட்சியை பிடித்ததோ அந்த ஆயுதமே தற்போது அவர்களின் திசை நோக்கி திரும்பியிருக்கிறது. இந்த அளவிற்கான எதிர்ப்புகள் இருக்கக்கூடும் என மோடியே கணித்திருக்க மாட்டார். அப்படி கணித்திருந்தால், செய்யாமல் விட்ட சிலவற்றை செய்திருப்பார் அல்லது தேவையின்றி செய்த சிலவற்றை செய்யாமல் இருந்திருப்பார் என பாஜகவினரே புலம்பி வருகின்றனர்.
ஆனால், இது போன்ற டிவிட்டர் டிரெண்டுகள், சமூகவலைதள விமர்சனங்கள் போன்றவற்றுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்காததை போல் பாஜகவினர் காட்டிக் கொண்டாலும், டிவிட்டரில் #மோடியே வருக (#WelcomeModi) ஹேஸ்டேக்கை டிரெண்டாக்க அவர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இருப்பினும், தமிழக நெட்டிசன்கள் விட்டுக் கொடுக்காமல், இந்த முறையும் #திரும்பிப் போ மோடி (#GoBackModi) ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
தமிழக பாஜக தலைமைக்கு இதுபோன்ற டிரெண்டுகள் பெரும் தலைவலியாக இருக்கக்கூடும். இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களிடையே பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை, தமிழகத்துக்கு பாஜக என்னென்ன உதவிகளை செய்திருக்கிறது என்பதை பட்டியலிட தாம் தயார் என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.