கோயம்புத்தூர்: கேரளா எல்லை பகுதியில் உள்ள பொள்ளாச்சி கிணத்துக்கடவு சுற்றுவட்டார கிராமங்களில் கல்குவாரிகள் அமைத்து சட்ட விரோதமாகக் கனிம வளங்கள் கடத்தப்படுவதாகக் கூறியும், இதனைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தக் கோரியும் நேற்று (பிப்.26) பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, “தொடர்ந்து இந்த பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளால், இப்பகுதி பாலைவனமாக மாறுவதற்கு அதிக அளவு வாய்ப்புகள் உள்ளது. 123 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள நல்லேபுள்ளி என்ற ஊரில் ஒரே நாள் இரவில் பூகம்பத்தினால் 9,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து 1947ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த அதிமுக ஆட்சி வரை 50 அடி முதல் 65 அடி வரை மட்டுமே தோண்டப்பட்ட கனிம வளங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 அடிக்கு மேல் அதிகப்படியாகச் சுரண்டப்படுகிறது. இது அடுத்த தலைமுறையைப் பாதிக்கின்ற பிரச்னை. மேலும் பூமிக்குக் கீழே மெல்ல மெல்ல வெப்பம் அதிகரிப்பதால் 15 வருடங்களில் பாதிப்பு அதிகரிக்கும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பீகார் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நிலக்கரி ஊழலில் 20 ஆண்டுகளுக்கு பின்பும் சிறை செல்கின்றனர். எனவே கனிம வள ஊழலில் ஈடுபடுவோர் சிறை செல்வது உறுதி. வாகனங்களில் 12 யூனிட் ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகள், 3 யூனிட்டுக்கு மட்டுமே தமிழ்நாடு அரசுக்கு பணம் கட்டுகின்றனர். மீதம் உள்ளவற்றை கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மற்றும் விபி அண்ட் கோ நிறுவனத்தினர் பயனடைகின்றனர்.
அதிகப்படியான பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் சாலைகள் பாதிப்படைகின்றன. இதனால் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே 20 நாட்களுக்குள் தமிழ்நாடு அரசு இதனை தடுத்து நிறுத்தாவிட்டால், தமிழ்நாட்டின் எல்லையோரத்தில் உள்ள 11 தணிக்கைச்சாவடி முன்பு பிஜேபி கட்சி நிர்வாகிகளை வைத்து வாகனங்களைத் தடுப்பேன்” என பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு ஒதுக்கிய ரூ.3,000 கோடி என்ன ஆனது?: அரசுக்கு அண்ணாமலை கேள்வி